பட்டா மாறுதல் செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது? - Law in Tamil


பட்டா மாறுதல் செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

ஒரு நிலத்தின் உரிமையாளர் யார் என்பது குறித்து ஒரு பிரச்சினை எழுந்தால் பட்டா மாறுதல் செய்ய வட்டாட்சியருக்கு அதிகாரம் கிடையாது. இந்த மாதிரி சூழ்நிலையில் வட்டாட்சியர் சொத்தின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிய ஒரு விசாரணை நடத்த முடியாது. ஒரு தரப்பினருக்கு பட்டா மாறுதல் செய்வது குறித்து எவ்வித அறிவிப்பும் அனுப்பாமல், விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல் அவர் பெயரில் உள்ள பட்டாவை ரத்து செய்வது இயற்கை நீதிக்கு (Natural Justice) முரணானதாகும்.

சட்டம் என்ன சொல்கிறது?
தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் பிரிவு 10ன் படி பட்டா மாறுதல் செய்ய முதலில் வட்டாட்சியரிடம் தான் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு வட்டாட்சியர் கீழ்கண்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
(1) எந்தவொரு நபர் காலமாகிவிட்டால் அல்லது
(2) அந்நிலத்தின் உரிமை மாறுதல் செய்யப்பட்டிருந்தால் அல்லது
(3) அந்த சூழ்நிலையில் பிற்பாடு ஏதேனும் மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தால்
ஆகிய சூழ்நிலைகளில் மட்டுமே பட்டா மாற்றம் செய்ய வட்டாட்சியருக்கு அதிகாரம் உண்டு. அவ்வாறு பட்டாவில் மாறுதல்கள் செய்ய விரும்பும் நபர் ஒரு விண்ணப்பத்தை வட்டாட்சியரிடம் அளிக்க வேண்டும். வட்டாட்சியர் அது சம்மந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அவர்கள் தரப்பினை வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தாக்கல் செய்வதற்கு போதுமான வாய்ப்பினை அளிக்க வேண்டும். அதன் பிறகு தான் வட்டாட்சியர் பட்டா மாற்றம் சம்பந்தமான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.


அரசாங்கத்தால் நிலம் ஒதுக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டிருந்தால்?
அரசாங்கத்தால் ஒருவருக்கு நிலம் ஒதுக்கப்பட்டு அதற்காக ஒரு பட்டா வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே அதனை ஓர் ஆவணமாக கருத முடியும். அத்தகைய பட்டாவை சொத்தின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிய ஓர் ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு இல்லாத நிலையில் சொத்தின் உரிமையாளர் யார் என்பதை காட்டுவதற்கான ஓர் ஆவணமாக பட்டாவை ஏற்றுக் கொள்ள முடியாது.


நிலத்தின் மீது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உரிமை கொண்டாடினால்?
ஆவணங்களின் அடிப்படையிலும் சொத்தின் சுவாதீனத்தின் அடிப்படையிலும் அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பது குறித்து ஒரு பிரச்சினை இருந்தால் அதனை தீர்மானிப்பதற்கு உரிமையியல் நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
வழக்கு எண்: W. P. NO - 491/2012, dt-04.06.2014,
விஜய் சக்கரவர்த்திக்காக அவருடைய அங்கீகார முகவர் R. M. சாத்தையா Vs
கலெக்டர், சிவகங்கை மாவட்டம், வருவாய் கோட்ட அலுவலர், தேவகோட்டை, மற்றும் சரோஜா (2015-3-TLNJ-CIVIL-134)


நன்றி - வழக்கறிஞர் பாஸ்கர் - 9042629090

Madhegowdu

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Instagram