நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் சிறு மற்றும் குறு தொழில்முனைவோர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். பெரு நிறுவனங்களை காட்டிலும் சிறு மற்றும் குறு நிறுவனங்கள்தான் நாட்டில் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. சிறு வணிகர்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. சிறு மற்றும் குறு தொழில்முனைவோர்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய அரசின் பிரதம மந்திரியின் முத்ரா கடன் திட்டம் உதவுகிறது. Micro Units Developement and Refinancing Agency என்பதன் சுருக்கமே MUDRA (முத்ரா) ஆகும்.
முத்ரா திட்டத்தின் கடன் அளவு
முத்ரா திட்டத்தில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரை சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்க்கு கடன் வசதி வழங்கப்படுகிறது. முத்ரா திட்டத்தில் கடன் பெற எந்த பிணையமும் (Surety) தேவையில்லை. சிறு மற்றும் குறு தொழில்முனைவோர்கள் தங்களுக்கு தேவைப்படும் நடைமுறை மூலதனத்திற்கும், நிரந்தர முதலீட்டிற்கும் முத்ரா கடனுதவியை பெறலாம்.
முத்ரா திட்டத்தின் வகைகள்:
பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் சிசு, கிசோர், தருண் என மூன்று வகையான திட்டங்கள் உள்ளன. ரூ.50 ஆயிரம் வரை கடன் தேவைபடுபவர்களுக்கு சிசு (Shishu) வகையிலும், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 இலட்சம் வரை கடன் தேவைபடுபவர்களுக்கு கிசோர் (Kishor) வகையிலும், ரூ.10 இலட்சம் வரை கடன் தேவைபடுபவர்களுக்கு தருண் (Tarun) வகையிலும் கடன் வழங்கப்படுகிறது.
கடன் பெற தகுதிகள்
முத்ரா கடனுதவி பெறுவதற்கு 18 வயது பூர்த்தியாகியிருக்கவேண்டும். விண்ணப்பிக்கும் சிறு, குறு நிறுவனங்களின் பொருட்கள் மத்திய அரசின் சிறு குறுந்தொழிலுக்கான பொருட்களுக்கான பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே கடன் பெற்று திரும்ப செலுத்தாதோர் முத்ரா கடனுதவி பெற இயலாது.
முத்ரா கடனுதவியை சிறு மற்றும் குறுந் தொழில் உற்பத்தி நிறுவனங்கள், சிறிய வணிக கடைகள், விற்பனையாளர்கள், அழகு மையங்கள், நடைபாதை வணிகர்கள், கைவினைக் கலைஞர்கள், இளைஞர்கள், படித்தவர்கள் மற்றும் மகளிர் தொழில் முனைவோர் நிதியுதவி பெறலாம்.
முத்ரா கடனுதவி எங்கு பெறுவது
பொது துறை வங்கிகள், தனியார் வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மண்டல கிராம வங்கிகளில் பிரதம மந்திரி முத்ரா கடன் திட்டத்தில் விண்ணபித்து கடன்களை பெறலாம். முத்ரா கடன் திட்டத்தை பற்றி ஏதேனும் விவரங்கள் தேவைபட்டால் அருகிலுள்ள வங்கியையோ, மாவட்ட தொழில் மையத்தையோ தொடர்பு கொள்ளலாம்.
வட்டி விகிதம்
முத்ரா கடனுக்கான வட்டி விகிதம் 12% to 13.5% வரை உள்ளது. வட்டி விகிதத்தின் அளவு வங்கிக்குவங்கி மாறுபடும்.